தருமபுரி மாவட்ட ஆட்சியர் கார்த்திகா, தலைமையில் தமிழ்நாடு அரசின் 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டில் அரசு பள்ளிகளில் பயின்று மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.
மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து உள்ள 21 மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்டெதாஸ்கோப் உபகரணங்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
பின்னர் இந்நிகழ்வில் பேசிய அவர், "மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளில் 12ஆம் வகுப்பு பயின்று, நீட் தேர்வு எழுதி தற்போது 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டு காரணமாக 21 மாணவ மாணவியர்கள் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.
இதில் 15 மாணவ-மாணவிகள் அரசு மருத்துவக்கல்லூரிகளிலும், 3 பேர் சுயநிதி மருத்துவக்கல்லூரிகளிலும், 3 மாணவர்கள் பல்மருத்துவக் கல்லூரிகளிலும் சேர்ந்துள்ளனர். மாவட்டத்தில் 164 மாணவ-மாணவிகள் அரசு வழங்கிய நீட் தேர்வு பயிற்சியை பெற்றனர். இவர்களில் 21 பேர் தற்போது மருத்துவப்படிப்பில் சேர்ந்துள்ளனர்.
இவர்களுக்கு தருமபுரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் புதிய கற்றல் சூழல் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. அரசு வழங்கியுள்ள சிறப்பான வாய்ப்பை மாணவ-மாணவிகள் சிறந்த முறையில் பயன்படுத்தி மருத்துவம் பயிலவேண்டும்.
சிறந்த சேவைப்பணியான மருத்துவர் பணிக்கான கல்வியை பயில எந்தவித அச்சமும், தயக்கமும் இன்றி நம்பிக்கை மற்றும் விடாமுயற்சியுடன் செயல்படவேண்டும்.
மாணவர்கள் அனைவருக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில் முதன்மைக் கல்வி அலுவலர் கீதா, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் இளங்கோவன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர் ஜெமினி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.