தருமபுரி: அரூர் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2022-23ஆம் ஆண்டுக்கான அரவை பருவத்தில் கரும்பு அரவை பணியினை தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி தொடங்கி வைத்தார். நடப்பாண்டில் அரவை நடைபெறுவதற்கு ஆலையில் 10,577 ஏக்கர் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடப்பு பருவத்தில் 3,95,000 மெட்ரிக் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கிய அரவை பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் வாரம் வரை 70 நாட்கள் நடைபெறும். மேலும், விவசாயத் தோட்டத்திலிருந்து ஆலை அரவைக்கு கரும்பினைக் கொண்டு வர 115 லாரிகள், 81 டிராக்டர்கள், 41 டிப்பர் மற்றும் 25 மாட்டு வண்டிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மேலும், ஆள் பற்றாக்குறை, கூலி குறைக்க இரண்டு இயந்திரங்கள் மூலம் கரும்பு அறுவடை செய்யப்படவுள்ளது. எதிர் வரும் 2023-24-ம் ஆண்டில் 14,000 ஏக்கர் கரும்பு பதிவு செய்து 4,30,000 மெட்ரிக் டன் அரவை மேற்கொள்ள விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும் என ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு அறிவுறுத்திறுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர்(சர்க்கரை ஆலை) ரஹ்மத்துல்லா கான், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினா் செந்தில்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. தடங்கம் சுப்பிரமணி, முன்னாள் எம்.எல்.ஏ பழனியப்பன் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: பெண்களை பலாத்காரம் செய்ய கணவருக்கு பிளான்.. கொடூர பெண் சிக்கியது எப்படி?