தருமபுரி அரசு மருத்துவமனையில் கரோனா சோதனை முடிவுகளைத் தெரிந்துகொள்வதற்கான பிரத்யேக இணையதளம் www.gdmch.in-ஐ தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி நேற்று (ஆக. 25) தொடங்கிவைத்தார்.
இந்த இணையதளம் மூலம் தருமபுரி மாவட்டத்தில் கரோனா சோதனை முடிவுகளை மக்கள் காலதாமதம் இன்றி 24 மணி நேரத்திற்குள் அறிந்துகொண்டு உடனடியாக மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ள பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
கரோனா சோதனை முடிவுகள் பரிசோதனை செய்துகொண்ட நபர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பப்பட்டுவந்த நிலையில், முடிவுகளைப் பதிவிறக்கம் செய்யும் வகையில் அதற்கான தனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் பணிபுரிபவர்கள் அதிகம். மேலும் தருமபுரியிலிருந்து வெளிமாநிலங்களுக்குப் பணிக்குச் செல்பவர்கள் வசதிக்காகவும் அவர்களின் கரோனா சோதனை முடிவுகளை இணையதளத்தில் வெளியிட மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
கரோனா சோதனை செய்துகொண்டவா்கள் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவர்களுக்கு உரிய சோதனை முடிவை மொபைல் எண்ணில் பதிவுசெய்து பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையிலும் தேவைப்படும் இடங்களில் சான்றிதழைக் காண்பிக்கவும் இந்த இணையதளம் அவர்களுக்கு உதவும்.
கரோனா பரிசோதனை சான்றிதழுக்காகப் பொதுமக்கள் அலைய வேண்டிய அவசியமில்லை. இணையதள தொடக்க நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட துணை சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் ஜெமினி, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் இளங்கோவன், மருத்துவக் கல்லூரியில் கண்காணிப்பாளர் சிவகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்
இதையும் படிங்க: 'திருமண அழைப்பிதழ் இருக்கோ இல்லையோ கரோனா பரிசோதனை சான்றிதழ் இருக்கணும்'