தருமபுரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
"தருமபுரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய் தொற்றை கட்டுப்படுத்தும் பொருட்டு மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி சுகாதாரத் துறை, காவல் துறை, வருவாய் துறை, ஊராட்சி துறை ஏனைய அனைத்து துறைகளும் இணைந்து தருமபுரி மாவட்டத்தில் வைரஸ் பரவாமல் அயராது பணியாற்றுகின்றனர்.
வெளிமாநிலம், மாவட்டங்களிலிருந்து தருமபுரி திரும்புவோருக்கு செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதில், அறிகுறி உள்ளவர்களை அழைத்து வந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கு அவர்களுக்கு தனி அறை, மூன்று வேளையும் சத்தான உணவு , முகக்கவசம், அவர்களின் அறைக்கு ஐந்து முறை கிருமி நாசினி தெளித்து நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள்.
இங்கு தங்கியிருக்கும் அனைத்து நபர்களுக்கும் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி, அவர்களுக்கு கரோனா நோய் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டப்பின், மருத்துவ ஆலோசனைகள் கூறி, அதாவது வீட்டிற்குள் தங்களை தனிமைப்படுத்துதல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல், கைகளை அடிக்கடி சோப்பு கொண்டு 20 விநாடிகளுக்கு கழுவுதல், சத்தான காய்கறி உணவு வகைகள் உட்கொள்ளுதல் முதலிய அறிவுரைகளை பரிந்துரைத்து அவரவர் இடத்திற்குச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.
கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டால் அவரை மேல் சிகிச்சைகாக உடனடியாக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் கரோனா வைரஸ் சிறப்பு சிகிச்சை பிரிவில் ஆயிரத்து 450 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன" என்றார்.
இதையும் படிங்க: போரைவிட கரோனாவில் அதிகம்: அமெரிக்காவின் துயர நிலை