சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியைச் சேர்ந்த சேட்டு மகன் சந்திரபிரசாத் (40). இவர் ஜவுளி தொழில் செய்துவருகிறார். இந்நிலையில், சந்திரபிரசாத் மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் உள்ள கடைகளுக்கு மொத்த விலையில் ஜவுளி ஏற்றுமதிசெய்துள்ளார். சமீபத்தில் கோலாப்பூர் சென்ற சந்திரபிரசாத் ஜவுளிக்கான தொகை பதினேழு லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தை வசூல்செய்துள்ளார்.
இதனை ஒரு பெட்டியில் எடுத்துக்கொண்டு நேற்று முன்தினம் கோலாப்பூரிலிருந்து கோவை செல்லும் தனியார் சொகுசுப் பேருந்தில் ஏறி சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். தருமபுரி அருகே பேருந்து வந்துகொண்டிருந்தபோது பயணிகள் உணவு உண்ண சிறிதுநேரம் நின்றது. அப்போது, சந்திரபிரசாத் உணவு உண்ண பேருந்தை விட்டு கீழே இறங்கியுள்ளார்.
உணவு உண்டபின், பேருந்து புறப்படும்போது சந்திரபிரசாத் பேருந்தில் ஏறும்போது அவர் கொண்டுவந்த பெட்டி உடைந்திருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்து பெட்டியினுள் பார்த்தபோது பணம் கொள்ளைபோனது தெரியவந்தது. இது குறித்து அவர் தருமபுரி நகர காவல் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளார்.
தகவலையடுத்து விரைந்துவந்த காவல் துறையினர் பேருந்தை நகர காவல் நிலையத்திற்கு கொண்டுவந்து பேருந்தில் பயணம்செய்த பயணிகளிடம் விசாரணை நடத்தினர்.
மேலும் கொள்ளைச் சம்பவம் குறித்து மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர்கள் ஜித்தேந்திரர் யாதவ், ராம்பட்டேல், விஷால் ஆகிய மூவரையும் பிடித்து சந்தேகத்தின் பெயரில் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க:
அம்பேத்கர் படிப்பகம் அமைப்பதற்கு எதிர்ப்பு - தாக்கப்பட்ட இளைஞர்கள்!