தருமபுரி: தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி) ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்காளர் வரைவு பட்டியலை, மாவட்ட ஆட்சியர் சாந்தி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.
அதன்படி, பாலக்கோடு சட்டமன்றத் தொகுதியில் 1 லட்சத்து 19 ஆயிரத்து 277 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 16 ஆயிரத்து 349 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 35 ஆயிரத்து 643 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில், 1 லட்சத்து 25 ஆயிரத்து 361 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 16 ஆயிரத்து 780 பெண் வாக்காளர்கள் என 2 லட்சத்து 42 ஆயிரத்து 150 வாக்காளர்கள் உள்ளனர்.
அதேபோல், தருமபுரி சட்டமன்றத் தொகுதியில் 1 லட்சத்து 29 ஆயிரத்து 383 ஆண் வாக்காளர்களும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 26 ஆயிரத்து 566 பேர் என 2 லட்சத்து 56 ஆயிரத்து 447 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 49 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 25 ஆயிரத்து 908 பெண் வாக்காளர்கள் என 2 லட்சத்து 52 ஆயிரத்து 972 வாக்காளர்கள் உள்ளனர்.
அரூர் சட்டமன்றத் தொகுதியைப் பெருத்தவரை, 1 லட்சத்து 20 ஆயிரத்து 752 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 19 ஆயிரத்து 716 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 40 ஆயிரத்து 490 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் தருமபுரி மாவட்ட ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் மூன்றாம் பாலினத்தவர் 161 வாக்காளர்கள் உட்பட, மொத்தம் 12 லட்சத்து 27 ஆயிரத்து 302 வாக்காளர்கள் உள்ளனா் என்பது மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள வாக்காளர் பட்டியல் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும், 2024ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் சிறப்புச் சுருக்கத் திருத்தம் அக்டோபர் 27ஆம் தேதி முதல் டிசம்பர் 9ஆம் தேதி வரை செய்யலாம் என்றும், தருமபுரி மாவட்டத்தில் உள்ள 885 வாக்குச் சாவடி மையங்களில் காலை 10 மணி முதல் 5 மணி வரை புதிய வாக்காளர் படிவங்கள் பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.