தருமபுரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று சோதனை மையம் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது. தருமபுரி செட்டிகரை அரசு பொறியியல் கல்லூரியில் கரோனா தடுப்பு சிகிச்சை மையம், நடமாடும் கரோனா வைரஸ் பரிசோதனை வாகனம், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா தொற்று சோதனை செய்யப்படுகிறது.
தொற்று சோதனைகள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள ஆய்வகத்தில் சோதனை செய்து அதன் முடிவுகள், அந்தந்த பகுதி ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்கள், சுகாதாரப் பணியாளர்கள் என பல்வேறு நிலை அலுவலர்களுக்கு அந்தந்த பகுதிகளில் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் முழு விவரம் அடங்கிய அறிக்கை அனுப்பப்படுகிறது.
தொற்று பாதிக்கப்பட்டவர்களின் அறிக்கையில் அவர்களது பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளன. விவர அறிக்கையில், அலுவலர்கள் தொற்று பாதிக்கப்பட்ட நபர்களை நேரடியாக அவர் வீட்டுக்குச் சென்று மருத்துவமனையில் சேர்ப்பதற்காக வழங்கப்படுகிறது. சில அலுவலர்கள் அரசிடமிருந்து வழங்கப்படும், பாதிக்கப்பட்ட நபர்களின் அறிக்கையை வாட்ஸ்அப் குழுக்கள், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர்.
வைரஸ் தொற்ற பாதிக்கப்பட்டவர்களின் விவரம் இன்று மாலை சென்னையிலிருந்து வெளியிடப்படும். ஆனால், ஒரு நாள் முன்பே வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் விவரம் தருமபுரியில் வெளியானது. கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்களின் சுய விவரங்களை பொது வெளியில் பரப்பக்கூடாது என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் ஒரு சில அலுவலர்களின் தவறான நடவடிக்கையால் வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் பொது வெளியில் பரப்பப்படுவதால் அவர்களது தனி உரிமை மீறப்படுகிறது.
தருமபுரி மாவட்ட நிர்வாகம், மருத்துவம், உயர் அலுவலர்களும் கரோனா நோயாளிகளின் விவரங்கள் சமூக ஊடகங்களில் பரவுவதை கட்டுப்படுத்த மருத்துவ பணியாளர்களுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.