தர்மபுரி: தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை இறுதி செய்யும் பணியில் முனைப்பு காட்டி வருகின்றன. இதற்கிடையில் சில கட்சிகள் வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுள்ளன.
அந்தவகையில், அமமுக சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைமை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் பழனியப்பன் அமமுக சார்பில் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் குறித்த தகவல்களை இனி அறிவோம்.
பெருமாள்- பொன்னியம்மாள் தம்பதியினருக்கு 1961ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் தேதி பிறந்தார். 55 வயதான இவர் விவசாயத்தை தனது முதல் தொழிலாக கொண்டுள்ளார். இவர், முதுநிலை தாவரவியல் படித்துள்ளார்.
1980ஆம் ஆண்டு அதிமுகவில் உறுப்பினராக சேர்ந்த இவர், மோளையானூர் கிளைச் செயலாளர், மாவட்ட மாணவரணி துணைத் தலைவர், பாப்பிரெட்டிபட்டி ஒன்றிய கழகச் செயலாளர், ஜெ.பேரவை மாவட்டச் செயலாளர், கழக தலைமை நிலையச் செயலாளர் என படிப்படியாக கட்சியில் உயர்ந்தார்.
பின்னர், 2001-2006ஆம் ஆண்டு மொரப்பூர் சட்டப்பேரவை உறுப்பினராகவும், 2011-2016ஆம் ஆண்டு பாப்பிரெட்டிபட்டி சட்டப்பேரவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சராகவும் இருந்தார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர் அதிமுகவில் ஏற்பட்ட பிளவால், இவர் டிடிவி தினகரன் அணியில் தன்னை இணைத்துக்கொண்டார். இதனால், இவர் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பதிவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து தற்போது, அமமுக துணை பொதுச் செயலாளராக உள்ள இவர், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இதையும் படிங்க : அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு