தருமபுரி மாவட்ட மக்களின் பிரதான தொழில் விவசாயமாகும். இம்மாவட்டத்தில் சவுல் மண் (சரளை) பூமியாக உள்ளது. பெரும்பாலும் இந்த சவுல் மண் பகுதியில் நெல், தக்காளி, கரும்பு போன்ற பயறுவகைகளை பயிரிட முடியாது.
இந்நிலையில், அரியகுளம் பகுதியை சோ்ந்தவர் நீஜாமுதின் என்ற விவசாயி சவுல் பூமியில் பேரீச்சை மரங்களை நட்டு, நல்ல மகசூல் பெற்று வருவாயை ஈட்டி வருகிறார்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் அரேபிய நாடுகளில் பணியற்றிய இவர், அங்கு பேரீச்சை சாகுபடி செய்யும் பண்ணைகளில் பார்வையிட்டபோது, இவருக்கும் பேரீச்சை விவசாயத்தின் மீது ஆா்வம் ஏற்பட்டுள்ளது.
அதனை தொடா்ந்து பேரீச்சை சாகுபடி செய்வது குறித்த பயிற்சிகளை எடுத்துக்கொண்டு அரபுநாடுகளில் இருந்து 250 பேரீச்சைகன்றுகளை இந்தியாவிற்கு இறக்குமதி செய்து, தனக்கு சொந்தமான ஒன்பது ஏக்கா் நிலப்பரப்பில் பயிரிட்டுள்ளார்.
அவை பயிரிட்ட மூன்று ஆண்டுகளில் நல்லப்பலனை தந்துள்ளது. தற்போது நிஜாமுதின் தோட்டத்தில் 35 வகையான பேரீச்சை மரங்களில், சுவையான பேரீச்சை பழங்கள் அறுவடை நடைபெற்று வருகின்றது.
அரபு நாடுகளில் வளரும் பேரீச்சை ரகங்கள் தருமபுரி மாவட்டத்தின் தட்ப வெட்ப நிலைக்கும் நல்ல முறையில் வளா்ந்து, மரத்திற்கு சுமார் 100 கிலோ முதல் 200 கிலோ வரை மகசூல் தருகிறது. இந்த பேரீச்சை பழங்கள் கிலோ 100 முதல் 300 ரூபாய் வரை விற்பனையாகிறது.
சுற்றுப்புறங்களில் உள்ள வியாபரிகள் நிஜாமுதிநின் பண்ணைக்கே வந்து பழங்களை வாங்கி செல்கின்றனா்.
அதுபோலே கிருஷ்ணகிரி, சேலம், திண்டுக்கல், ஈரோடு, மதுரை, உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், ராஜஸ்தான், டெல்லி, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் விவசாயகள் பேரீச்சை கன்றுகளை வாங்கி சென்று விவசாயம் செய்கின்றனர்.
விவசாயம் பயிலும் மாணவா்களும் இவரிடம் பேரீச்சை சாகுபடி குறித்து பயிற்சி எடுத்து செல்கின்றனர். இந்த பேரீச்சை பழங்கள், கன்றுகள் தருமபுரியில் இருந்து தாய்லாந்து, இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கு விமானம் முலம் ஏற்றுமதி செய்வதாகவும் தெரிவிக்கின்றார்.
வானம் பார்த்த விவசாய பூமியில், சொட்டு நீா் பாசனத்தால் சாதனை செய்துள்ளார் விவசாயி நீஜாமுதின்.
இதையும் படிங்க: வெட்டி வேரில் முகக்கவசம்... கவனம் ஈர்க்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்!