தர்மபுரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, "சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு தமிழ்நாடு முழுவதும் ஆதரவு அலை வீசுகிறது. அதிமுக கூட்டணிக்குதான் ஆதரவு அலை வீசுவதாக அன்புமணி ராமதாஸ் கூறிவருவது உண்மைக்குப் புறம்பானது.
அதிமுக - பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பலை வீசிவருகிறது. மோடியின் முகத்தைப் பார்த்தாலே பெண்களுக்கு ஆத்திரம்வருகிறது. உழவன் என்று கூறிக்கொள்ளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடிவரும் உழவர்களுக்கு குரல் கொடுக்காததது ஏன்?
எட்டு வழிச்சாலை, கெயில் குழாய்கள் பதிப்பு, உயர் அழுத்த மின் கோபுரங்கள் உள்ளிட்டவற்றிற்கு எதிராகப் போராடும் உழவர்களைக் கைதுசெய்து சிறையில் அடைத்தவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
தமிழ்நாடு முழுவதும் உழவர்கள் முதலமைச்சருக்கு எதிரான மனநிலையில் உள்ளனர்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை உயர்வு போன்றவைகளால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் உழவர்கள், தொழிலாளர்கள், சிறு குறு தொழில்முனைவோர், இளைஞர்கள் என அனைத்துத் தரப்பினரும் திமுக கூட்டணிக்கு வாக்களிக்கத் தயாராக உள்ளனர்.
அதிமுக - பாஜக கூட்டணி தோல்வியைத் தழுவுவது உறுதி. பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளிலும் வைப்புத்தொகையை இழக்கும்.
நாளை (மார்ச் 28) சேலத்தில் மு.க. ஸ்டாலின், ராகுல் காந்தி ஆகியோர் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளனர். அப்பொழுது எழுப்புகின்ற குரல் தமிழ்நாட்டின் எட்டுத்திக்கும் எதிரொலிக்கும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: தொகுதியில் உள்ள குழந்தைக்கு கூட என் பெயர் தெரியும்! - ஜெயக்குமார்