தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளதையடுத்து தேர்தல் பணிகளில் ஈடுபடும் அலுவலர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளில் பணியாற்ற உள்ள அரசுப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள மொத்தம் 14 ஆயிரத்து 294 பணியாளர்களின் வசதிக்காக, 13 மையங்களில் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று (மார்ச் 3) காலை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கார்த்திகா, அம்மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்ட தேர்தலில் பணியாற்ற உள்ள அலுவலர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
இந்நிகழ்வில் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் அமுதவல்லி, சுகாதாரத் துறை துணை இயக்குனர் மருத்துவர் ஜெமினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: சனத்குமார் ஆறு ஆக்கிரமிப்பு! - நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு ஆணை!