தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த மாரண்டஅள்ளி பகுதியில் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் பணியாற்றிய பணியாளர் ஒருவருக்கு இன்று (செப் 15) கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விற்பனையாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், டாஸ்மாக் கடையை மூடி சீல் வைத்தனர்.
அதே சமயம் டாஸ்மாக் கடைப் பணியாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கடந்த சில தினங்களாக அவரிடம் மதுபானம் வாங்கிய மதுப் பிரியர்கள் பீதியில் உள்ளனர். டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மது வாங்க வரும் மதுப்பிரியர்கள் தகுந்த இடைவெளியைக் கடைபிடிக்காமல் தொடர்ந்து முண்டி அடித்துக் கொள்வது தற்போது வாடிக்கையாகி வருகிறது.
இதுகுறித்து டாஸ்மாக் பணியாளர்கள் கூறுகையில், 'மதுப்பிரியர்களை தகுந்த இடைவெளியைக் கடைபிடிக்க வலியுறுத்தினாலும் காவல் துறையினர் இல்லாத காரணத்தால், அவர்கள் தங்களிடம் பிரச்னை செய்கின்றனர். அதேசமயம் கரோனா தொற்றுப் பரவல் தடுப்புக்காக முகக்கவசம், கையுறை போன்றவைகூட நிர்வாகத்தால் வழங்கப்படுவதில்லை. இதனால் எங்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது' என வேதனைத் தெரிவித்தனர்.