சீனாவில் உருவான கரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்திவருகிறது. இந்தியாவையும் இந்த வைரஸால் பாதித்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் ஒருவர் உயிரிழந்தும், 27 பேர் பாதிக்கப்பட்டும் உள்ளனர். இதனையடுத்து கரோனாவிலிருந்து பாதுகாத்துக்கொள்ள மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.
இந்நிலையில் இது குறித்து தருமபுரி மக்களவை உறுப்பினர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில் “தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை. இதை நான் ஒரு பகிரங்கமான குற்றச்சாட்டாகவே சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது தெரிவிக்கிறேன் எனத் தெரிவித்தார்.
மேலும், “கரோனா பற்றி தவறான தகவல்களை தெரிவித்தால், கைது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார். ஆனால் நான் வைக்கும் இந்த குற்றச்சாட்டை என்னால் நிரூபிக்க முடியும். கரோனா வைரஸ் தொற்று அறிகுறியுடன் வரும் நோயாளிகளை கையாளுகின்ற மருத்துவர்களுக்கு போதிய அளவு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவில்லை. தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் மருத்துவர்களுக்கு வழங்கப்படும் உபகரணங்கள் தரமில்லாமல் எச்ஐவி பாதிக்கப்பட்ட வார்டுகளில் பயன்படுத்தப்படும் உபகரணம் என தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இந்தக் கரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கான தரமான உபகரணங்கள் தரப்படவில்லை. இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நிரூபிப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன் என சவால் விடுத்தார்.
முன்னதாக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வைரஸ் வார்டு அமைக்க ஒரு கோடி ரூபாயும், தருமபுரி தொகுதியில் உள்ள சேலம் மாவட்டம் மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிறிய கரோனா வார்டு அமைக்க 20 லட்சம் ரூபாயும் அவர் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க...இது கரோனா நடைபயணம்...