தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் சுற்று வட்டார பகுதியில் நேற்று (மே.3) மாலை பலத்த சூறைக் காற்றுடன் கனமழை பெய்தது. கோடிஅள்ளி ஊராட்சி, தெய்வபுரம் ஒண்டிக் கோட்டை பகுதியை சேர்ந்த கட்டட தொழிலாளி ஜெயவேல், மளிகைக் கடையின் மொட்டை மாடியில் சிமெண்ட் சீட்டை சரி செய்வதற்காக மொட்டை மாடிக்குச் சென்றுள்ளார்.
அப்பொழுது பலத்த காற்று வீசியதால் ஜெயவேல் தூக்கி வீசப்பட்டார். இதில் தார் சாலையில் விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து அங்கு சென்ற காவல் துறையினர், சடலத்தை மீட்டு பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்துக் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து கன மழை மற்றும் பலத்த காற்றில் கட்டிட தொழிலாளர் தூக்கி வீசப்பட்டு இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு