தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்தவர்கள் ஜெயக்குமார் - சிவன்யா தம்பதி. இவர்களுக்கு கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு கரோனா இரண்டாவது அலையின் போது ஜெயக்குமார் கரோனா பாதிப்பில் உயிரிழந்தார்.
இதனையடுத்து ஜெயக்குமார் இறப்பின் தொடர்பாக சான்றிதழ் பெறுவதற்காக ஜெயக்குமாரின் நண்பரான, பட்டுக்கோணம்பட்டி பகுதியைச் சார்ந்த திமுக பிரமுகர் பாபு என்பவர் உதவி செய்து வந்துள்ளார். இதில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பாபு சிவன்யாவை கட்டாயப்படுத்தி பலமுறை நெருக்கமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரும் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். இதில் சிவன்யாவிற்கு அரசு வேலை பெற்று தருவதாகக் கூறி ரூ.4.60 லட்சம் பணத்தினை பாபு வாங்கியுள்ளார்.
இந்நிலையில் இருவருக்குமான பழக்கத்தில் சிவன்யா கருத்தரித்துள்ளார். இதனை அறிந்த பாபு, குழந்தையை கருவிலேயே கலைக்கச் சொல்லி அடிக்கடி அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், இதற்கு சிவன்யா ஒப்புதல் அளிக்காமல், பெண் குழந்தையும் பெற்றெடுத்துள்ளார். தற்போது 8 மாத பெண் குழந்தை ஒன்று இருந்து வருகிறது.
ஆனால், பாபுவிற்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்து, மூன்று பெண் மற்றும் ஒரு ஆண் பிள்ளையினை பெற்றிருப்பது தெரியாமல், சிவன்யா பழகி வந்துள்ளார். தொடர்ந்து, இருவருக்கும் ஏற்பட்ட பிரச்னையில் ஏற்கனவே இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்டது சிவன்யாவிற்கு தெரியவந்துள்ளது. இதில் முதல் மனைவி சங்கீதா பட்டுக்கோணம்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினராக இருந்து வருகிறார்.
அப்போது இரண்டு மனைவி இருப்பதை மறைத்து தன்னிடம் நடந்து கொண்டது குறித்து கேட்டுள்ளார். அதற்கு தனது இரண்டு மனைவிகளுக்கும் இதை நான் தெரியப்படுத்துவேன் என்று பாபு சமாளித்துள்ளார். இந்நிலையில் தன்னிடம் பெற்ற பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு சிவன்யா, பாபுவுடன் கேட்டபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இரண்டு மனைவிகளுக்கும் இந்த சம்பவத்தை சிவன்யா தெரிவித்தவுடன், ஊர் பஞ்சாயத்து மூலமாக பேசி ரூ.1.50 லட்சம் பணத்தினை திருப்பிக் கொடுத்துள்ளார்.
மேலும், இனிமேல் பணம் கேட்டு வந்தால் உன்னையும் உனது ஆண் பிள்ளையையும் கொலை செய்து விடுவோம் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் உயிருக்கு பயந்த நிலையில் சிவன்யா, திமுக நிர்வாகிகளை சந்தித்து பாபு மீது புகார் தெரிவித்துள்ளார். தொடர்ந்து திமுக நிர்வாகிகள் நடத்திய விசாரணையின்போது, பணம் பெற்றதாகவும், குழந்தை தனக்கு பிறந்ததாகவும் அதனை கடைசிவரை வைத்து பாதுகாத்துக் கொள்வதாகவும் பாபு ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
ஆனால், ஒப்புக்கொண்டபடி பாபு நடந்து கொள்ளாததால், மீண்டும் திமுக நிர்வாகிகளிடம் சிவன்யா முறையிட்டுள்ளார். இதனை சட்டப்படி காவல் நிலையத்தில் புகார் கொடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுத்துக்கொள்ளுங்கள் என திமுகவினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், தன்னிடம் பணம் பெற்றுக் கொண்டு திருப்பித் தராமலும், தன்னை ஏமாற்றி பழகி பிறந்த பெண் குழந்தையை விற்பனை செய்யவும், கருவிலேயே கலைக்கவும் முயற்சி செய்து, தன்னை ஏமாற்றிய பாபு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிவன்யா புகார் அளித்தார்.
இதனையடுத்து தருமபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்று ( ஏப்.17 ) விசாரணை நடைபெற்றது. இதில், இருவரிடமும் நடைபெற்ற விசாரணையின் போது, பாபு சிவன்யாவிடம் பழகியதும், பணம் பெற்றதையும் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் தன்னிடம் பெற்ற பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும். அதேபோல் தனது பெண் குழந்தைக்கு அப்பாவாக அனைத்து கடமைகளையும் செய்ய வேண்டும் என சிவன்யா தெரிவித்துள்ளார்.
ஆனால், காவல் நிலையத்தில் பாபு முழுவதையும் ஒப்புக்கொண்ட பிறகும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யாமல், விசாரணை செய்யாமல் இரண்டு நாள் அவகாசம் கேட்டுள்ளனர். இந்நிலையில் புகாருக்குள்ளானவரே அனைத்து தவறுகளையும், ஒப்புக்கொண்ட பிறகும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்ய மறுப்பதாக சிவன்யா, கண்ணீர் மல்க வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
நண்பன் உயிரிழந்தவுடன், உதவி செய்ய வந்த திமுக பிரமுகர் பாபு, விதவை பெண்ணிடம் பணம் பெற்றுக் கொண்டும், பழகி குழந்தை பிறந்த பின் ஏமாற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பச்சிளம் குழந்தை உயிருடன் புதைத்து கொலை.. பெற்ற தாயே கொலை செய்த கொடூரம்..