தருமபுரி மாவட்டம் காரிமங்கலம், பாலக்கோடு பகுதிகளில் தூய்மைக் காவலர்கள், துப்புரவுப் பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள், நிவாரணப் பொருட்களை உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "கடந்த இரு தினங்களில் 1 லட்சத்து 55 ஆயிரத்து 627 குடும்ப அட்டைகளுக்கு நிவாரணத் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவர்களுக்கு ஓரிரு நாட்களில் வழங்கப்படும். வருகின்ற 6ஆம் தேதி முதல் தொடர்ந்து விலையில்லா உணவுப் பொருட்களை மீதமுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கிட மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
தருமபுரியில் 1 நகராட்சி, 10 பேரூராட்சி, 251 ஊராட்சிகள் உள்ளன. அவற்றில் பணியாற்றும் தூய்மைக் காவலர்கள், துப்புரவுப் பணியாளர்கள் ஆகியோர் கரோனா தடுப்புப் பணி அறிவிக்கப்பட்டது முதல் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகின்றனர். நகராட்சிப் பகுதிகளில் மொத்தம் 350 பேர், 10 பேரூராட்சிகளில் தூய்மைக் காவலர்கள் 187 பேர், துப்புரவுப் பணியாளர்கள் 277 பேர் என மொத்தம் 464 பேர் பணியாற்றுகின்றனர்.
10 ஒன்றியங்களில் உள்ள 251 ஊராட்சிகளில் தூய்மைக் காவலர்கள் 1,822 பேர், துப்புரவுப் பணியாளர்கள் 610 பேர் என மொத்தமாக 2,432 பேர் சிறந்த முறையில் பணியாற்றி வருகின்றனர்.
அவர்களுக்கு பொது விநியோகத் திட்டப் பொருட்கள் மட்டுமின்றி ஒவ்வொருவருக்கும் 10 கிலோ அரிசி, 2 கிலோ பருப்பு, 1 லிட்டர் எண்ணெய், 1 கிலோ சர்க்கரை ஆகிய பொருட்கள் அதிமுக சார்பில் வழங்கப்பட்டுள்ளன. ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இருசக்கர வாகனங்களில் தேவையின்றி யாரும் வெளியில் செல்லக் கூடாது. அவரவர் வீட்டில் இருப்பது அனைவருக்கும் பாதுகாப்பு. பொருட்கள் வாங்க செல்பவர்கள் கட்டாயம் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: 'கூட்டம் கூடாமல் சமூக இடைவெளியைக் கடைப்பிடியுங்கள்' - முதலமைச்சர் நாராயணசாமி