தருமபுரி மாவட்டம் பொன்னகரத்தைச் சேர்ந்த திருமூர்த்தி (42), மனைவி லதா (41), மகன் நிதி அபிநவ் (13), மகள் அபிநய கீர்த்தி (10), வேத ரித்திகா (6) ஆகியோர் தருமபுரியிலிருந்து பொன்னாகரத்திற்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். அந்தக் காரினை திருமூர்த்தி ஓட்டிச்சென்றார்.
அப்போது வேலூர் மாவட்டம் திருப்பத்தூரிலிருந்து தருமபுரி நோக்கி விவேக் (30), ஆடிட்டர்கள் ரத்தின வேல் (40), சரவணன் (40), பிரகாஷ் (37), முருகன் ஆகியோர் காரில் வந்து கொண்டிருந்தனர். காரை முருகன் ஓட்டி வந்துள்ளார்.
இரண்டு கார்களும் மல்லாபுரம் பகுதியில் வந்தபோது, நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் லதா சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த திருமூர்த்தி, நிதி அபிநவ் உள்ளிட்ட எட்டு பேரையும் மீட்டு உடனடியாக தருமபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
அங்கு சிகிச்சைப் பலனின்றி திருமூர்த்தி, அவரது மகன் அபிநவ் இருவரும் உயிரிழந்தனர். இந்த நிலையில் அபிநய கீர்த்தி மேல்சிகிச்சைக்காகா சேலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து இண்டூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய கார் ஓட்டுநர் முருகனை தேடிவருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.