தருமபுரி மாவட்டம் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மொரப்பூர், திப்பம்பட்டி கூட்ரோடு ஆகிய இரண்டு இடங்களில் சுமார் இரண்டு கோடி மதிப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்பட்டது. இதில் மொரப்பூர் பேருந்து நிலையத்தில் 16 கடைகளும் திப்பம்பட்டி கூட்ரோடு பேருந்து நிலையத்தில் 27 கடைகளும் கட்டப்பட்டன. ஆனால், இதுவரை முறையாக ஏலம் விடவில்லை.
கடந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் இரண்டு முறை ஏலம் விடுவதாக தேதி அறிவிக்கப்பட்டு இரண்டு முறையும் நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பொதுமக்கள், வணிகர்களுக்கு தெரியப்படுத்தாமல், ரகசியமாக இரண்டு பேருந்து நிலையங்களில் உள்ள கடைகள் ஏலம் விடப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையறிந்த வணிகர்களும் பொதுமக்களும் இது குறித்து தங்களுக்கு தெரியப்படுத்தாமல் ரகசியமாக கடைகள் ஏலம் விடப்பட்டதை கண்டித்தும், அந்த ஏலத்தை ரத்து செய்து வெளிப்படையான ஏலத்தை நடத்த வலியுறுத்தியும் மொரப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முறையாக அறிவிப்பு செய்து தண்டோரா மூலம் பொது மக்களுக்கு தெரியப்படுத்தி கடைகளை ஏலம் விட வேண்டும். இந்த மறைமுக ஏலத்தை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதில் பெண்கள், வணிகர்கள், அனைத்து கட்சியினர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க : தமிழ்நாடு அரசை கண்டித்து திமுக கண்டன ஆர்ப்பாட்டம்