தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம் கோட்டப்பட்டி பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக புரெவி புயல் காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையால் விளைநிலங்களில் உள்ள பயிர்கள் சேதமடைந்துள்ளன.
கோட்டப்பட்டி பகுதியில் விவசாயி பழனி என்பவருக்கு சொந்தமான 1500-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் காற்று, மழைகாரணமாக சேதமடைந்து. கோட்டப்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பலரது வயல்களில் நடவு செய்திருக்கும் நெற்பயிர்களும் இந்த மழையால் சாய்ந்து சேதமடைந்துள்ளன.
இது குறித்து வாழைவிவசாயி பழனி கூறுகையில், "நிவர் புயலின் தாக்கம் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டம் வரை இருக்கும் என அரசு தரப்பில் தெரிவித்து வந்தனர். இவ்விரு மாவட்டங்களின் எல்லையையொட்டிய தருமபுரி மாவட்டம் கோட்டப்பட்டி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.
இதனால், எங்கள் பகுதி விளைநிலங்களில் பெரும் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் நிலவியது. ஆனால், அந்த புயலின்போது பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. அதேநேரம், புரெவி புயல் தாக்கம் தென் தமிழக மாவட்டங்களில் தான் இருக்கும் என்று கூறப்பட்டதால் எங்கள் பகுதி விவசாயிகள் கவலையின்றி இருந்தோம்.
ஆனால், இந்த புயலால் பெய்த மழை தான் அதிக சேதங்களை ஏற்படுத்தி விட்டது. அரசு தரப்புக்கு சேதம் குறித்து தகவல் அளித்தோம்.
உடனே, வருவாய், தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் நேரில் வந்து சேதங்களை பார்வையிட்டு சென்றுள்ளனர். பாதித்த விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்கி உதவ வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: மலை வாழை விலை வீழ்ச்சி - விவசாயிகள் வேதனை!