தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த சில மாதங்கள்சிகிச்சை பெற்ற கா்ப்பிணிகள்,தாய்மார்கள் என 15 போ் உயிரிழந்துள்ளனர். இந்த மரணங்கள் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாதிக்கப்பட்டவா்கள் சுகாதாரத் துறையில் புகார் அளித்துள்ளனர்.
இந்தப் புகாரின் பேரில் தமிழ்நாடு சுகாதாரத் துறை சார்பில் ஜனவரி 22ஆம் தேதி குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் உயா் மருத்துவ அலுவலர்கள் ரகசியமாக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ரத்த வங்கியில் ஆய்வு நடத்தியுள்ளனர். ஆய்வில் ரத்தம் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்பதனை கண்டறிந்தனர்.
ரத்த வங்கியில் இருப்பு வைக்கப்பட்டிருந்த ரத்தம் ஏற்றப்பட்டநோயாளிகள், கர்ப்பிணிகள், தாய்மார்கள் உடல்நலம் பாதிப்புக்கு உள்ளாகி சிலர் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்புக்கு காரணம்ரத்த வங்கியில் தவறு நடந்திருப்பதும், இதில் பலருக்கு தொடர்பு இருப்பதும் உறுதி செய்யப்பட்டு அந்த குழு அறிக்கை அளித்துள்ளது.
அதன் அடிப்படையில் இந்த விவகாரத்தில் ரத்த வங்கி அலுவலர்கள் மூன்று பேர் மீது குற்ற நடவடிக்கை மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோரி மாநில சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஸ்- மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோ, மருத்துவ சேவைகளுக்கான இயக்குநர் ருக்மணி ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், ‘தவறிழைத்தவர்கள் மீது குற்றப்புகார் பதிவு செய்ய வேண்டும். ஒப்பந்த மருத்துவர்கள் உள்ளிட்டோர் இதில் சம்பந்தப்பட்டிருந்தால் உடனடியாக அவர்கள் நீக்கப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


மேலும் அதில்,10-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மற்றும் லேப் டெக்னீஷியன்கள் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கியின் மருத்துவ அலுவலர் எம்.சந்திரசேகர், செவிலியர்கள் கே.ஜெயா, ஆர்.ராணி, டி.சாரதா, எல்.கலைவாணி, டி.எஸ்.விமலா, எஸ்.கே.உமாராணி, கே.சுகதேவ், பி.செல்வி, கே.மாலதி- ஆய்வக பணியாளர்கள் ஆர்.திருமால், எஸ்.கவிதா, எஸ்.சோனியா ஆகிய 13 பேர் மீது தமிழ்நாடுசுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவர்கள் மீது 17-பி பிரிவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரத் துறை செயலருக்கு எழுதப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.