தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பாப்பாரப்பட்டி தியாகி சுப்ரமணிய சிவா மணி மண்டபத்தில் பாரத மாதா திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்குள் பாஜக மாநில துணைத் தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி. ராமலிங்கம் நுழைவுப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விவகாரம் தொடர்பாக இன்று (ஆக.04) பென்னாகரம் நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்கு மீண்டும் ஆக.18ஆம் தேதி அன்று தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளா்களைச் சந்திந்த கே.பி.ராமலிங்கம், ''என் மண், என் மக்கள் யாத்திரை பயணம் சேலத்தில் தொடங்கி தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மூன்று மாவட்டங்களில் நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது. அதற்கு முன்பு செப்டம்பர் மாதம் நாமக்கல் - சங்ககிரி பகுதியில் 25, 26, 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக இந்தியா முழுவதும் உள்ள தியாகிகள் வாழ்ந்த இடங்களில் இருந்தும்; அவர்களது நினைவிடத்தில் இருந்தும் மண் மற்றும் அங்குள்ள சிறப்பான செடிகளையும் டெல்லியில் உள்ள போர் நினைவு சின்னம் அருகில் சேர்த்து, அங்கு பாரத மாதாவுக்கு கோயிலை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் பாப்பாரப்பட்டி பாரத மாதா திருக்கோவிலில் உள்ள சுப்பிரமணிய சிவா நினைவு மண்டபத்தில் இருந்தும் மண் எடுத்துச் செல்லப்படும். சேலம் மாவட்டம், சங்ககிரியில் இருந்து தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட இடத்திலிருந்து மண் எடுத்துச் செல்லப்படும். இதேபோல் தமிழ்நாட்டில் உள்ள தியாகிகள் வாழ்ந்த இடங்களிலிருந்து மண் எடுத்துச் செல்ல பாரதிய ஜனதா கட்சி சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'அதிமுகவை விமர்சித்தால் எதிர் விமர்சனங்களை சந்திக்க நேரிடும்' - அண்ணாமலைக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை!