தருமபுரி : கடந்த சனிக்கிழமை பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலாபுரம் ஏரி சீரமைப்புக்கான தொடக்க விழா நிகழ்ச்சிக்கு எம்பி செந்தில்குமார் சென்றிருந்தார். அங்கு இந்து முறைப்படி பூஜைகள் நடைபெற்றதை அவர் கண்டித்து அரசு அலுவலர்களை கேள்வி எழுப்பினார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.
இதற்கு பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் தர்மபுரி எம்பி செந்தில்குமாருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாஜக சார்பில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பாஸ்கர் தலைமையில் தர்மபுரி ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செந்தில்குமாரை கண்டித்தும், ஆளும் திமுக அரசை கண்டித்தும் பாஜகவினர் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கர், இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கும் திராவிட மாடல் அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் இந்துக்கள் முறைப்படி பூமி பூஜைக்கு அரசு அலுவலர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
பூமி பூஜையை கொச்சைப்படுத்தும் விதமாக எதற்காக இதனை ஏற்பாடு செய்தீர்கள் எனக் கேட்டு அலுவலர்களை பணி செய்ய விடாமல் இந்து சமய முறைப்படி செய்த பூஜைகளை உடனடியாக அங்கிருந்து அகற்ற சொல்லி இருக்கிறார்.
எம்பி செந்தில்குமார் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்" என்றார்.
இதையும் படிங்க: தனியார் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தி மனு