தருமபுரியில் மக்களவை மற்றும் இடைத்தேர்தல் தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ள, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச்செயலாளர் பாலகிருஷ்ணன் தருமபுரிக்கு வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பரப்புரை மேடையில் அன்புமணி ராமதாஸ் வாக்குச்சாவடிகள் குறித்து பேசி இருந்தார். அவர் பேச்சின் விளக்கம் வாக்குச்சாவடிகளில் மற்றவர்களை அனுமதிக்காமல் வாக்கு சாவடிகளை கைப்பற்றுவோம் என்று பகிரங்கமாக சொல்லியுள்ளார். வன்முறையான இந்த பேச்சை தேர்தல் ஆணையம் எவ்வாறு அனுமதிக்கலாம். மற்றவர்கள் மீது உடனுக்குடன் வழக்கு போடும் தேர்தல் ஆணையம், அன்புமணி மீது வழக்கு தொடுக்கமால் உள்ளது. வாக்குச் சாவடியை கைப்பற்றுவது என்பது வன்முறையை தூண்டும் செயல், உடனடியாக அன்புமணி மீது வழக்குத் தொடுத்து கைது செய்ய வேண்டும் எனக் கூறினார். பாமக-வை வைத்து வன்முறை மூலம் அதிமுக கூட்டணி வெற்றி பெற நினைக்கிறது. இதற்கு சான்றாக அன்புமணி மேடைகளில் பரப்புரைகளில் மறைமுகமாக பேசி வருகிறார்.
மேலும் பேசிய அவர், அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் அமைத்திருக்கும் கூட்டணி முரண்பாடான கூட்டணி. ‘நீட்’ தேர்வு ரத்து செய்ய அதிமுக, பாமக ஆகிய இரு கட்சிகளும் வலியுறுத்துகிறது. ஆனால், அவர்களின் கூட்டணியில் உள்ள பாஜக தான் நீட் தேர்வை அமல்படுத்தியுள்ளது. அதேபோல மது ஒழிப்பை பாமக முன்னிறுத்துகிறது. ஆனால், அதிமுக மது விற்பனையை நியாயப்படுத்துகிறது. இதுவே அவர்களின் முரண்பாடன தன்மையை வெளிப்படுத்துகிறது.
அதிமுக சார்பில் சென்ற மக்களவைத்தேர்தலில் 37 எம்.பி-க்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள், நீட் தேர்வு,பாலாறு, கஜா மற்றும் வர்தா புயல், ஜிஎஸ்டி-யில் தமிழகத்துக்கு சேர வேண்டிய பங்குத் தொகை உள்ளிட்ட எந்த வித கோரிக்கைகள் தொடர்பாகவும் மத்திய அரசிடம் வலியுறுத்தவில்லை.எதிர்கட்சிகள் மீது திட்டமிட்டே வருமான வரித்துறை சோதனை நடத்து வருகிறது. ஆளுங்கட்சியினர் தரப்பை எந்த வித சோதனைக்கும் உட்படுத்துவது இல்லை.தேர்தல் ஆணையம் ஆளும் கட்சியின் கைப்பாவையாக உள்ளது என பகிரங்கமாக குற்றம் சாட்டுவதாகவும் கூறினார்.