தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் தக்காளி சந்தை இயங்கி வருகிறது. மாவட்டத்தின் பாலக்கோடு, மாரண்டஹள்ளி, பென்னாகரம், பெரியாம்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் விவசாயிகள் சாகுபடி செய்த தக்காளிகளை பாலக்கோடு தக்காளி சந்தையில் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.
பாலக்கோடு தக்காளி சந்தையிலிருந்து நாளொன்றுக்கு 100 முதல் 150 டன் தக்காளி வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகின்றன. இந்நிலையில், விவசாயிகள் கொண்டுவரும் தக்காளி, சந்தையில் உள்ள இடைத்தரகர்கள் விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு வாங்கி சென்னை போன்ற பெருநகரங்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்துவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இன்று பாலக்கோடு சந்தையில் தக்காளி கிலோ 15 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டு அவை சென்னை போன்ற பெருநகரங்களுக்கு கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர்.
விவசாயிகளுக்கு வர வேண்டிய லாபம் இடைத்தரகர்களுக்கே செல்வது கவலையளிக்கிறது. பாலக்கோடு தக்காளி சந்தைக்கு வரும் வெளியாட்களை இடைத்தரகர்கள் அனுமதிப்பதில்லை என்று கூறப்படுகிறது. இதனால், இடைத்தரகர்கள் நிர்ணயிக்கும் தொகையில் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்.
எனவே, மாபியா கும்பல் போல இடைத்தரகர்கள் செயல்படுவதால் விவசாயிகள் இவர்களிடமிருந்து தங்களை காக்க உழவர் சந்தையில் விலை நிர்ணயம் செய்வது போல தினம் தினம் வரும் தக்காளியின் வரத்தைப் பொறுத்து இங்கும் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை நிர்ணயிக்க மாவட்ட நிர்வாகம் ஆவண செய்யவேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் வேண்டுகோளாக உள்ளது.