தர்மபுரி மாவட்டம் அரூர் அனுமந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (37). இவரது கணவர் பார்த்திபன் ஏழு வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில், அனுமந்தபுரம் அருகே உள்ள சந்திராபுரம் பகுதியில் இவர்களுக்கு சொந்தமாக ஒரு ஏக்கர் நிலம் உள்ளது.
ஜெயலட்சுமியின் பக்கத்து நிலத்துக்காரர் குப்புசாமி என்பவர் அடிக்கடி ஜெயலட்சுமியிடம் சாலை வசதி தொடர்பாக தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து ஜெயலட்சுமி பலமுறை காவல்துறையினர், வருவாய்த் துறையினரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனையடுத்து நேற்று (பிப்.22) ஜெயலட்சுமி தனது இரண்டு மகள்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்தார். அங்கிருந்த காவல்துறையினர் அவரை உடனடியாக தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.