தருமபுரி மாவட்ட காவல் துறைக்குச் சொந்தமான ஆயுதப்படை வளாகம் வெண்ணாம்பட்டி பகுதியில் 36 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த வளாகத்தில் காவலர்களுக்கான 350 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இவ்வளாகத்தில் காவலா் பயிற்சிப் பள்ளி செயல்பட்டுவருகிறது.
ஆயுதப்படை பயன்பாட்டுக்கென ஆறு ஆழ்துளை கிணறுகள் உள்ளன. இதில் நான்கு கிணறுகள் கோடை வறட்சி காரணமாக வறண்டுவிட்டன. இதனையடுத்து ஆயுதப்படையில் தண்ணீர் தட்டுபாடு நிலவியது.
இந்நிலையில் இப்பகுதியில் வசிக்கும் காவலர்கள் மழைக்காலத்தில் மழைநீரை சேமிக்க திட்டம் ஒன்றை வகுத்தனர். அதன்படி காவலர்கள் தங்களது பணி நேரம் போக மீதி நேரங்களில் குளம் வெட்டும் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஐந்து நாட்களில் மூன்று குளத்தை இவர்கள் வெட்டியுள்ளனர். இதற்கு தேவைப்பட்ட பணத்தை காவல் துறையினர் பங்கிட்டுக் கொண்டனர்.
இவர்கள் குளங்கள் தயார்செய்த சில தினங்களிலேயே தருமபுரி மாவட்டத்தில் தொடர்மழை பெய்துவருகிறது. இதனால் மழைநீா் குளங்களில் தேங்கத் தொடங்கியது. இந்த மழைநீர் சேமிப்பால் ஆழ்துளை கிணற்றில் நீர் ஊறத் தொடங்கிவிட்டது. இதனால் ஆயுதப்படை வளாகத்தில் தற்போது தண்ணீர் தட்டுப்பாடு குறைந்துள்ளது.
இது குறித்து மதுவிலக்குப் பிரிவு துணை கண்காணிப்பாளா் மணிகண்டன் கூறியதாவது, ஆயுதப்படை வளாகத்தில் காவலா் பயிற்சிப்பள்ளி நடைபெற்றுவருகிறது. காவலா்களுக்கு தேவையான தண்ணீரை வெளியில் விலைகொடுத்த வாங்கிவந்தோம்.
வளாகத்தில் உள்ள மரங்கள் காய்ந்து கிடந்ததை பார்த்து மழைநீரை சேமிக்க குளம் அமைக்க முடிவு செய்தோம். பின் ஆயுதப்படை வளாகத்தில் இடத்தை ஆய்வுசெய்து அதில் குளங்களை வெட்டினோம். தற்போது பெய்த மழையில் வறண்டு கிடந்த ஆழ்துளை கிணறுகளில் தண்ணீா் வர தொடங்கிவிட்டது. அதனை பார்க்கும்போது மனநிறைவாக இருக்கிறது.
இதற்கு உதவிபுரிந்த காவலா்களுக்கும் ஆலோசனை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும் இயற்கைக்கும் நன்றி என்று தெரிவித்தார்.