தருமபுரி: பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் சுற்றுலாத் தளத்திற்கு, கோடை விடுமுறையை முன்னிட்டு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், ஒகேனக்கலுக்கு செல்லும் வழியில் இருக்கும் மடம் சோதனைச் சாவடியில் இருந்து ஒகேனக்கல் காவல் நிலையம் வரை உள்ள பாதை காடுகள் வழியாக கடந்து செல்கிறது.
இதில் கணவாய் பள்ளம் பகுதியில் யானைகள் சாலையை அடிக்கடி கடப்பது வழக்கமான ஒன்று. இதனிடையே, இந்தப் பகுதியில் காட்டு யானை ஒன்று சாலை அருகே இருந்த தண்ணீரைக் குடித்துக் கொண்டு இருந்துள்ளது. இதனைப் பார்த்த இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் கார்களில் பயணம் செய்யும் சுற்றுலாப் பயணிகள் வாகனத்தை நிறுத்தி விட்டு, தங்கள் செல்போனில் வீடியோ எடுத்தும், செல்பி எடுத்தும் செல்கின்றனர்.
இவ்வாறு ஆபத்தை உணராமல் யானையை அச்சுறுத்தும் வகையில் வீடியோ எடுத்து, வாகனங்களை சாலையில் நிறுத்தும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயிரின ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதேநேரம், தருமபுரி மாவட்டத்தில் கடந்த இரு மாதங்களில் பாலக்கோடு, காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் யானை தாக்கி இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், காடுகள் வழியாக செல்லும் சுற்றுலாப் பயணிகளை மடம் சோதனைச் சாவடியில் யானையை அச்சுறுத்தும் வகையில் சாலையில் வாகனங்களை நிறுத்தக் கூடாது என்றும், யானைகளை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது என்றும் வனத் துறையினா் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்பது வன உயிரின ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.
இதையும் படிங்க: ஒகேனக்கலில் ஒரே நாளில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்; 8 கி.மீ.க்கு போக்குவரத்து பாதிப்பு!