ஆந்திர மாநிலம் சித்தூர் சாந்தி நகர் பகுதியைச் சேர்ந்த பீரித்தம்சௌத்திரி என்பவரின் மகன் சிந்தலபுடிலட்சுமி. இவர் சென்னையிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு பயின்றுவருகிறார். இந்நிலையில், இவரும் பெங்களூரைச் சேர்ந்த தனது நண்பர்கள் மூன்று பேருடன் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்துள்ளனர்.
ஒகேனக்கலில் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்த நான்கு பேரும் ஆலம்பாடி ஆற்று பகுதிக்குச் சென்று குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது, ஆற்றின் இக்கரையிலிருந்து அக்கரைக்கு சிந்தலபுடிலட்சுமி நீந்தி செல்லும்போது ஆற்றுச் சுழலில் சிக்கி தவித்துள்ளார்.
இதைப்பார்த்த கரையில் இருக்கும் சக நண்பர்கள் சத்தம் போட்டுள்ளனர். இதைக் கண்ட பரிசல் ஓட்டிகள், பொதுமக்கள் அவரை காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால் சிந்தலபுடிலட்சுமி அதற்குள் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர் இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பரிசல் ஓட்டிகள் உதவியுடன் சடலத்தை மீட்டு உடற்கூறாய்விற்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ஒகேனக்கல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 'அடடா மழைடா... கனமழைடா' - குமரியில் வாகன ஓட்டிகள் அவதி