கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதாலும், கர்நாடக அணைகளின் உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளதாலும் தண்ணீர் வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று (03.08.22) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வினாடிக்கு ஒரு லட்சத்து 35 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் வரத்து இருந்தது.
இதனிடையே மத்திய நீர் ஆணையம் இன்று இரவு வெளியிட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கையில், கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் வினாடிக்கு இரண்டு லட்சத்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் தர்மபுரி உள்ளிட்ட காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில் நாளை காலையிலேயே 2 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் மேட்டூர் அணையை வந்து சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு முதலே ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி, காவிரி கரையோரம் தாழ்வான பகுதியில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளார். கண்காணிப்பு பணிகளில் காவல்துறையினர் வருவாய்த் துறையினர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: தனியார் நீர்வீழ்ச்சி அகற்றும் பணி தீவிரம்