தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் கரோனா வைரஸ் தடுப்பு, விழிப்புணர்வு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நூற்றுக்கணக்கானோருக்கு குடிநீர், உணவுப் பொட்டலங்களை அழகு அரூர் அறக்கட்டளை வழங்கிவருகிறது. மேலும், ஆதரவற்றோருக்கும் இந்த அறக்கட்டளை உதவி வருகிறது.
அழகு அரூர் அறக்கட்டளைக்குச் சொந்தமான வாட்ஸ்-ஆப் குழு மூலம் இலவச உணவு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு, நிதி உதவி பெற்று கடந்த இரண்டு நாள்களாக இந்த பணிகளை அறக்கட்டளை நிர்வாகம் செய்துவருகிறது. இந்த வாட்ஸ்-ஆப் குழுவில் சார் ஆட்சியர், அரசுத் துறை அலுவலர்கள், தொழில் அதிபர்கள், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் இடம்பெற்றுள்ளனர்.
அரூரில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் காவல் துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை காவலர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என 500க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
சுகாதாரமாக உணவு தயாரித்து, சமூக இடைவெளி முறையை பின்பற்றி சமைத்த உணவை பொட்டலங்களில் அடைத்து, காவலர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோர் பணியாற்றும் இடங்களிலேயே உணவுப் பொட்டலம், குடிநீர் பாட்டில் வழங்கப்பட்டு வருகிறது. ஆதரவற்றோருக்கும் அவர்கள் வசிக்கும் இடங்களுக்கே சென்று உணவு பொருள்கள் வழங்கப்படுகின்றன.
இதையும் படிங்க... 'நான்தான் கரோனா வைரஸ்..!' - நூதன விழிப்புணர்வால் அசத்தும் கரோனா போலீஸ்!