தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜனவரி 12) பாப்பிரெட்டிபட்டி தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் கோவிந்தசாமி திடீரென தர்ணாவில் ஈடுபட்டார்.
இது குறித்து அவர் கூறியதாவது, "இன்று காலை பாப்பிரெட்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கடத்தூர் பேரூராட்சியில் ரூ.1.18 கோடி மதிப்பில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணியை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தொடங்கிவைத்துள்ளார். இதனை முன்கூட்டியே தெரிந்து, மாவட்ட ஆட்சியருக்குத் தகவல் தெரிவித்தேன்.
ஆனால் இதுபோன்று நடைபெறாது என மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தெரிவித்தார். ஆனால் இன்று திமுக நாடாளுமன்ற உறுப்பினரை வைத்து பணியினைத் தொடங்கிவைக்கிறார்கள்.
என் சட்டப்பேரவைத் தொகுதியில், எனக்கு அழைப்பு கொடுக்கவில்லை. அரசு தலைமைச் செயலர் உரிய நடவடிக்கை எடுக்கும்வரை தர்ணாவில் ஈடுபடுவேன்" என்றார். பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன், நேரில் வந்து அவரிடம் சமரசம் செய்து அழைத்துச் சென்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மேலும் 17,934 பேருக்கு கரோனா பாதிப்பு