தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டப்பேரவை தனித்தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர் சம்பத்குமார். இவர் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
அரூர் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் தீவிரமாக சம்பத்குமார் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இவரை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த குமார், அமமுகவைச் சேர்ந்த ஆர்.ஆர்.முருகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
அரூர் தொகுதி நிலவரம் குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திடம் சம்பத்குமார் கூறியதாவது, "அதிமுகவிற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இதுவரை அரூர் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு கிடைக்காத வரவேற்பு எனக்கு கிடைப்பது மகிழ்ச்சியாக உள்ளது. கரோனா தொற்று பரவல் காலத்தில் சிறப்பாக பணியாற்றினேன். அரசின் திட்டங்கள் மக்களுக்கு முழுமையாக கிடைத்துள்ளன. பொங்கல் பரிசுத் தொகுப்பு, கரோனா நிதி உதவி உள்ளிட்டவை மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளன. அரூரில் விவசாயம் பெருகியுள்ளது. தண்ணீர் பஞ்சம் இல்லை.
அரூர் தொகுதியில் 1,866 அடுக்குமாடி குடியிருப்புகள் நான் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோது கட்டப்பட்டது. சிட்லிங் மலைப்பகுதியில் மண் சாலை தார் சாலையாக மாற்றப்பட்டு உள்ளது. குடிமராமத்து திட்டத்தின் மூலம் அனைத்து ஏரி குளம் குட்டைகள் நிறைந்துள்ளன. சுதந்திரம் அடைந்ததிலிருந்து மின்சார வசதி இல்லாத காரப்பாடி மலை கிராமத்திற்கு எனது முயற்சியால் 160 மின்கம்பங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மலைக்கிராம மக்களுக்கு வருவாயை பெருக்கும் வகையில் கறவை மாடுகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.
ஈச்சம்பாடி அணையிலிருந்து ஏரியில் தண்ணீர் நிரப்பும் திட்டத்திற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தேர்தல் முடிந்தவுடன் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் தொடங்கப்படும். அரூர் தொகுதியில் எனக்கு வெற்றி நிச்சயம்" என்றார்.
இதையும் படிங்க: தர்மபுரி தொகுதிகள் உலா: தேர்தல் 2021; எதிர்பார்ப்பும் களநிலவரமும்!