தமிழ் புலிகள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் தருமபுரியில் நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் கூறுகையில், "பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்களில், பட்டியலின மக்கள், சிறுபான்மையினர் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் பட்டியலின மக்கள், சிறுபான்மையினர்களை பாதுகாக்க தமிழ் புலிகள் கட்சி பல்வேறு வழிகளில் இறங்கியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து இளைஞர் ஒருவர் ஒப்புக்கொண்டும் நீதிமன்றம் அவரை விடுதலை செய்துள்ளது. சிறுமிக்கு நீதி கிடைக்காத நிலை அச்சத்தை உருவாக்கியுள்ளது. தமிழ்நாட்டில் பட்டியல் இனத்தைச் சார்ந்த பஞ்சாயத்து தலைவர்கள் நாற்காலியில் அமர்ந்து பணி செய்ய முடியவில்லை.
சேலம் கோணக்காபாடி பஞ்சாயத்து, கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டை பஞ்சாயத்து உள்ளிட்ட பஞ்சாயத்துக்களில் பட்டியலினத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர்கள் சாதியின் பெயரால் துன்புறுத்தப்படுகின்றனர். எனவே, பஞ்சாயத்து தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
தமிழ்நாட்டில் பட்டியலின பஞ்சாயத்து தலைவர்கள் சுதந்திரமாக செயல்பட முடியாமல் உள்ள பஞ்சாயத்துகளை அடையாளம் கண்டு, பணிசெய்ய விடாமல் தடுப்பவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.