மாரண்டஹள்ளி: தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அருகே உள்ள காளிகவுண்டன் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 50). இவரது 2 ஏக்கர் விவசாய நிலத்தில் சோளம், ராகி, தென்னை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து உள்ளார். இரவு நேரத்தில் தோட்டத்திற்குள் புகுந்து யானை மற்றும் காட்டுப்பன்றி தொல்லை கொடுப்பதன் காரணமாக, தனது விவசாய நிலத்தில் சட்ட விரோதமாக மின்சார ஒயர்களை கொண்டு வேலி அமைத்து உள்ளார்.
தோட்டத்தின் அருகில் உள்ள மின்சார கம்பத்தில் இருந்து நேரடியாக மின்சாரம் எடுத்து மின்வேலியுடன் அவர் இணைத்து இருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில், உணவுத் தேடி ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் முருகேசன் தோட்டம் அருகே சுற்றித் திரிந்துள்ளன. தண்ணீர் தேடி வந்த 5 காட்டு யானைகள், விவசாயி முருகேசன் தோட்டத்திற்கு புகுந்துள்ளன.
இதில் முருகேசன் அமைத்த மின் வேலியில் சிக்கி 40 வயது மதிக்கத்தக்க 2 பெண் யானை, ஒரு ஆண் யானை என மூன்று காட்டு யானைகள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தன. அதிர்ஷ்டவசமாக இரண்டு குட்டி யானைகள் மட்டும் உயிர் தப்பின. அதிகாலை வேளையில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் பாலக்கோடு வனத்துறையினர், முதற்கட்டமாக சட்ட விரோத மின்வேலி அமைத்த விவசாயி முருகேசனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இது தொடர்பாக வனத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வனத்தில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராம விவசாய நிலத்திற்குள் புகும் காட்டு யானைகளை அடர்ந்த வன பகுதிகளுக்குள் மீண்டும் விரட்டாமல் வனத் துறை அதிகாரிகளின் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதே இது போன்ற உயிரிழப்பு நிகழ்வுகள் நடைபெற முதல் காரணமாக அமைவதாக அப்பகுதி பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
மின் வேலியில் சிக்கி உயிரிழந்த 3 காட்டு யானைகளின் சடலங்களை அப்புறப்படுத்தும் பணியில் வனத் துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரம் இறந்து கிடக்கும் யானைகளை அப்புறப்படுத்த விடாமல் குட்டி யானைகள் தடுத்து வருகின்றன. மின் வேலியில் சிக்கி உயிரிழந்த 3 யானைகளின் அருகில் நின்று கொண்டு குட்டி யானைகள் பாசப் போராட்டம் நடத்தி வருகின்றன.
இறந்து கிடக்கும் யானைகளை எழுந்து கொள்ளுமாறு குட்டி யானைகள் சைகை செய்வதும், எழுப்ப முயற்சிப்பதும் காண்போரின் கண்களை கலங்கச் செய்கிறது. உயிரிழந்த யானைகள் கடந்த ஒரு மாதத்திற்கு முன் காட்டில் இருந்து வெளியேறி, பாலக்கோடு மாரண்டஅள்ளி பகுதியில் சுற்றித் திரிந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களுக்கு முன் இதே யானைக் கூட்டம் ஊணவு தேடி ஊருக்குள் புகுந்தது, ஊர் ஏரியில் உற்சாக குளியல் போட்டது உள்ளிட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவின. தற்போது அந்த காட்டு யானைகள் உயிரற்று சடலமாக கிடப்பது அதை அடிக்கடி பார்த்து வந்த மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் சர்ச்சை பேச்சில் சிக்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி.. அப்படி என்ன பேசினார்?