தருமபுரி: பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் மாரண்டஅள்ளி அருகே உணவு தேடி சுற்றித்திரிந்த மூன்று காட்டு யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தன. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தின.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் உணவு மற்றும் குடிநீர் தேடி பாலக்கோடு, காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித் திரிகின்றன. அதன்படி, இன்று(ஏப்.27) காரிமங்கலம் பகுதியில் இரண்டு காட்டு யானைகள் முகாமிட்டிருந்தன. அப்பகுதிக்கு, பெரிய மொரசப்பட்டி கிராமத்தை சேர்ந்த வேடி(70) என்ற முதியவர் இயற்கை உபாதையை கழிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது யானைகள் முதியவரை தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.
நீண்ட நேரம் ஆன பிறகும் முதியவர் வீடு திரும்பாதததால், அவரது குடும்பத்தினா் அவரை தேடிச் சென்றபோது, அவர் யானை தாக்கி இறந்தது தெரியவந்தது. இது தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காரிமங்கலம் காவல் துறையினர் உடலை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். யானைகளின் நடமாட்டத்தை பாலக்கோடு வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
இப்பகுதியில் காட்டு யானைகள் தாக்கியதில் இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஒரு பெண் காயமடைந்துள்ளதாகவும் தெரிகிறது. காட்டு யானைகள் இரண்டு மாதங்களாக வனப்பகுதிக்குள் செல்லாமல் கிராமப் புறங்களில் சுற்றி வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.