பென்னாகரம்: தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அளேபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் தங்கராஜ் அவரது மனைவி பிரியா இருவரும் அவர்களது சொந்த கிராமத்திலேயே வசித்து வந்தனர். அவர்களது இரண்டு மகன்கள் மணிகண்டன் (25) சேட்டு(22 ) இரண்டு பேரும் வெளியூரில் வேலை செய்து வருகின்றனர்.
தங்கராஜ் கூலி வேலை செய்து வந்துள்ளார். பிரியா அதே பகுதியில் உள்ள தனியார் ஹோட்டல்களில் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று கணவன் மனைவியிடையே வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தகராறு ஒரு கட்டத்தில் முற்றிய நிலையில் கணவன் ஆத்திரமடைந்து பிரியாவை வீட்டில் வைத்திருந்த கத்தியால் கழுத்து, வயிற்றுப் பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளார்.
இதையும் படிங்க: தஞ்சாவூரில் பேப்பர் பொறுக்கிய பெண்ணை காலணியால் அடித்த நபர் கைது!
இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த பிரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஒகேனக்கல் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் நிகழ்விடத்திற்கு சென்ற போலீசார் பிரியா உடலை மீட்டு பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்தக் கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரியாவின் கணவர் தங்கராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத் தகராறில் மனைவியை கணவர் குத்தி கொலை செய்த சம்பவம் ஒகேனக்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஒரே நபரின் புகைப்படத்தை வைத்து 5,000 சிம் கார்டுகள்:எச்சரிக்கும் போலீசார்!