தருமபுரி: பொம்மிடி பகுதியில் பல்வேறு இடங்களில் இரவு நேரத்தில் வீடுகளின் பூட்டை உடைத்து தங்க நகைகள், விலை உயர்ந்த செல்போன்கள், பணம் உள்ளிட்டவற்றை அடையாளம் தெரியாத கும்பல் திருடி வருவதாக பொதுமக்கள் பொம்மிடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் உத்தரவின்பேரில் அரூர் காவல் துணை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேசன் தலைமையில் காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், பொம்மிடி பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக இருசக்கர வாகனத்தில் சுற்றி வந்த ஒரு இளைஞரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்துள்ளார். இதனையடுத்து இளைஞரிடம் தீவிர விசாரணை செய்ததில் அந்த இளைஞர் சேலம் மாவட்டம், ஏற்காடு பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்தது.
இதனையடுத்து ஏற்காடு பகுதிக்குச் சென்ற தனிப்படை காவல் துறையினர், திருட்டு வழக்கில் தொடர்புடைய பெரியான் (37), நல்லூர் பகுதியைச்சேர்ந்த கார்த்திக் (21), வெள்ளிக்கடை பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் (35), மணி (20), சக்திவேல் (26) உள்ளிட்ட ஐந்து பேரை பிடித்து விசாரணை செய்தனர்.
அப்போது, அவர்களிடமிருந்து ஏழு சவரன் தங்க நகை, குத்து விளக்கு, செல்போன், பணம், திருடுவதற்கு பயன்படுத்திய கத்தி, இரும்பு ராடு, முகமூடி மற்றும் வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த கும்பல் கடந்த இரண்டு மாதங்களாக இருசக்கர வாகனத்தில் ஏற்காட்டில் இருந்து பொம்மிடி பகுதிக்கு வந்து தனியாக இருக்கும் வீடுகளில், வயதானவர்களை நோட்டமிட்டு பகலில் கண்காணித்து, இரவு நேரங்களில் வீடு புகுந்து கொள்ளையடித்து ஏற்காடு தப்பிச்சென்றது தெரியவந்தது.
இதையும் படிங்க: குழந்தையை கொன்றவருக்கு இரட்டை ஆயுள் - நெல்லை மகிளா நீதிமன்றம் அதிரடி