தருமபுரி: கோயம்புத்தூர் மாவட்டம் ராஜவீதியில் பிரசன்னா (40) என்பவர் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று (செப்.27) பெங்களூரு சென்று, தனது நகைக் கடைக்குத் தேவையான 5 கிலோ எடையுள்ள பல்வேறு புதிய நகைகளை வாங்கிக் கொண்டு கார் மூலம் பெங்களூரில் இருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார்.
அந்த காரில், கடை பணியாளர்கள் விஜயகுமார் (46), சுரேஷ்குமார் (45) ஜெய்சன் (40) ஆகியோர் இருந்துள்ளனர். இந்நிலையில், காரிமங்கலம் அடுத்த பெரியாம்பட்டி ஆற்று மேம்பாலம் அருகே பூலாம்பட்டி என்ற இடத்தில் கார் சென்றபோது, அவர்களை பின்னால் துரத்திச் சென்ற இரண்டு கார்களில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், பிரசன்னா சென்ற காரை வழிமறித்துள்ளனர்.
பின்னர், காரின் சைடு கண்ணாடிகளை உடைத்து நொறுக்கி, ஆயுதங்களைக் காட்டி மிரட்டி காரில் இருந்தவர்களை இறக்கிவிட்டு, காரையும், காரில் எடுத்துச் சென்ற ஐந்து கிலோ நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதனையடுத்து, இது குறித்து காரிமங்கலம் காவல் நிலையத்தில் பிரசன்னா புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் பேரில் மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் விசாரணை நடத்தி வருகிறார். மேலும், கொள்ளைச் சம்பவம் நடந்த இடத்தில் சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாகூர் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கொள்ளைச் சம்பவம் நடந்த இடத்திலிருந்து கொள்ளையர்கள் பயன்படுத்திய இரும்புக் கம்பி, செல்போன் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து தனிப்படை அமைத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கரூர் திமுக பெண் கவுன்சிலர் கொலை வழக்கு; 24 மணி நேரத்திற்குள் இருவர் கைது!