கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த மாளிகைமேடு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (35). கூலித்தொழிலாளியான இவர் தினமும் குடித்துவிட்டு, மனைவி அமலாவிடம் தகராறில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில் நேற்றும் வழக்கம்போல் குடித்துவிட்டு அமலாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது ஆத்திரமடைந்த சுரேஷ், மனைவியை தலையணையால் அமுக்கி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதையடுத்து, இன்று காலையில் வெகுநேரமாகியும் சுரேஷின் வீடு திறக்கப்படாத நிலையில், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை திறந்து உள்ளே பார்த்தபோது அமலா சடலமாக கிடப்பது தெரியவந்தது.
இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகியுள்ள சுரேஷை காவல் துறையினர் தேடிவந்த நிலையில், அவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.