கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகர காவல் நிலையம் சிறப்பு உதவி ஆய்வாளர் வேல்முருகன், காவலர் மரிய சார்லஸ் ஆகியோர் கஞ்சித்தொட்டியருகே கடந்த 13ஆம் தேதியன்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக தங்களது இரண்டு குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதியினரை மறித்த காவலர்கள், இருசக்கர வாகனத்தில் இரண்டு பேருக்குதான் அனுமதி; ஏன் குழந்தைகளை ஏற்றி வந்தாய் என்று அவர்களிடம் கேட்டுள்ளனர்.
இதன்பின் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் என அனைத்து ஆவணங்களின் நகல்களையும் அவர்கள் காண்பித்த பிறகும் காவலர்கள் அபராதத்தொகையை வாங்குவதிலே குறியாக இருந்தனர். இது தொடர்பாக தம்பதியினருக்கும் காவலர்களுக்கும் இடையே நடைபெற்ற வாக்குவாதம் குறித்த காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.
காவலர்களின் இந்தச் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்தனர். இந்நிலையில், வாகனத் தணிக்கையின்போது ஒழுங்கீனமாக நடந்துகொண்டதற்காக சம்பந்தப்பட்ட காவலர்கள் இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: வி.சி.க. சார்பில் உலக சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது!