கோவிட்-19 பெருந்தொற்றினால் தமிழ்நாட்டில் இதுவரை 1,300-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 15 பேர் உயிரிழந்தும் உள்ளனர். இதன் காரணமாக, தமிழ்நாடு அரசு பொதுமக்களை வீட்டிலிருந்து வெளியே வரவேண்டாம் எனவும், அத்தியாவசியப் பொருட்களை வீட்டிலேயே கொண்டு வந்து சேர்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
இதனால் மாநிலத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ள நிலையில், சில பகுதிகளில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சும் பணியில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் கலந்துகொண்டார்.
ஸ்ரீ அபிநவ் கூறுகையில், 'கடலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை, கடந்த 3 தினங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சியதாகவும், விற்றதாகவும் சுமார் 90 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊரடங்கு காலத்தில் கைது செய்யப்படுபவர்கள் சிறைக்கு அனுப்பப்பட மாட்டார்கள் என்ற தவறான தகவல் பொதுமக்களிடையே பரப்பப்பட்டு வருகிறது. ஆனால், அது உண்மை அல்ல. தற்போது கைது செய்யப்படுபவர்களுக்காகவே கடலூர் கிளை சிறைச்சாலை தயாராக உள்ளது.
இதன் காரணமாக யார் கைது செய்யப்பட்டாலும் அவர்கள் சிறையில் அடைக்கப்படுவது உறுதி. மேலும் யூ-டியூப்பை பார்த்து சாராயம் காய்ச்சினால் கூட, அவர்கள் மீதும் குண்டர் தடுப்பு நடவடிக்கை பாயும்' என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க:டிக்டாக் பார்த்து சாராயம் காய்ச்சிய இருவர் - காவல்துறை வழக்குப்பதிவு!