வாக்களிப்பதின் முக்கியத்துவத்தை வாக்காளர்களுக்கு உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 25ஆம் தேதி இந்தியா முழுவதும் வாக்காளர் தினம் அனுசரிக்கப்படுகிறது. சாதி, மதம், இனம் என்ற வேறுபாடுகளைக் களைந்து 18 வயது நிரம்பிய இந்திய குடியுரிமை பெற்ற மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்துள்ள பெருமுளை கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னப்பையன். 106 வயதுடைய இவருக்கு 3 மகள்கள், 6 பேரக் குழந்தைகள் மற்றும் 15 கொள்ளு பேரக்குழந்தைகள் உள்ளனர். இவர் உள்ளாட்சித் தேர்தலில் தொடங்கி நாடாளுமன்றத் தேர்தல் வரைக்கும் தனது வாக்கைப் பதிவு செய்யத் தவறியதில்லை. 'நமது வாக்கு, நமது எதிர்காலம்' என்று இளம் தலைமுறையினருக்கு ஓர் வழிகாட்டியாக விளங்கி வருகிறார்.
பெருமுளை கிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு மாவட்ட துணை ஆட்சியர் பிரவீன்குமார் நேரில் சென்று, பாராட்டி கௌரவித்தார். சந்திப்பின் போது, ஒரு தாம்பூலத் தட்டில் வெற்றிலை, பாக்கு, பழம் உள்ளிட்ட பொருட்களை வைத்து துணை ஆட்சியர் மூத்த வாக்காளர் சின்னப்பையனிடம் வழங்கினார்.
பின்னர் சின்னப்பையன் செய்தியாளர்களிடம் கூறுகையில், " வாக்களிப்பது ஜனநாயகக் கடமையாகும். ஆகையால் தான் ஒவ்வொரு தேர்தலின் போதும் முதலில் எனது வாக்கை செலுத்தி விட்டுதான் அடுத்த வேலையைப் பார்க்கச் செல்வேன். அந்த அளவுக்கு உறுதியாக இருந்தேன். காமராஜர், கக்கன் காலம் தொடங்கி இன்று வரைக்கும் வாக்களித்து விட்டேன். ஆனால் அந்த காலத்தில் வாக்களிக்கும் போது வேட்பாளர்கள் எப்படிப்பட்டவர். அவரது நோக்கங்கள் என்ன என்பது குறித்து அறிந்து தான் வாக்களிப்போம். ஆனால், தற்போது கவர்ச்சி திட்டங்கள், வாக்குக்குப் பணம் என்று மாறி, தேர்தல் பரப்புரை என்பது மக்களை ஏமாற்றும் ஒரு செயலாக மாறிவிட்டது'' என்றார்.
இதையும் படிங்க: 71ஆவது குடியரசு தினம் - மாவட்ட ஆட்சியர்கள் கொடியேற்றம்