கடலூர்: சிதம்பரம் நகரில் பழமை வாய்ந்த அண்ணாமலைப் பல்கலைக்கழகம், உலகப் பிரசித்தி பெற்ற நடராஜர் கோயில், அலையாத்தி காடுகள் நிறைந்த பிச்சாவரம் சுற்றுலா மையம், உள்ளிட்ட சிறப்பு வாய்ந்த நகராக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சிதம்பரம் நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகளும் வசித்து வருகின்றனர்.
இரவு நேரங்களில் சில திருநங்கைகள், பேருந்து நிலையத்திற்கு வருவது வாடிக்கையாக உள்ளது. அங்கு வரும் திருநங்கைகள், பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் அடாவடித்தனமாக வசூல் வேட்டையில் ஈடுபடுவதும், இரவு நேரங்களில் இளைஞர்கள், பெரியோர்களை பாலியல் தொழிலுக்கு அழைத்துச் செல்வதும் தொடர்கதையாக உள்ளது.
இந்தச் சூழலில் திருநங்கைகளை, பேருந்து நிலையத்தில் கடை வைத்திருக்கும் உரிமையாளர்கள், “ இது போன்று அட்டூழியம் செய்யாதீர்கள். பயணிகள் அச்சப்படுகிறார்கள்” என்று கூறினால், அவர்களை அவதூறாகப் பேசி தாக்க முற்படுவதாக கூறப்படுகிறது. மேலும் இரவு 10 மணிக்கு மேல் பேருந்து நிலையத்திற்கு வரும் திருநங்கைகள், மது போதையில் இருக்கும் இளைஞர்களை அழைத்து வந்து, அடியாட்களைப் போல் பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு போதையில் இருந்த சில இளைஞர்கள் திருநங்கைகளை பாலியல் தொழிலுக்கு அழைத்ததாகவும், அப்போது திருநங்கைகள் அழைத்து வந்த இளைஞர்கள் மற்றும் அங்கு போதையில் வந்த இளைஞர்கள் மோதிக் கொண்டதாகவும், கூறப்படுகிறது. இந்நிலையில் இருதரப்பினரும் மோதிக்கொள்ளும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் பேருந்து நிலையத்தில் கடை வைத்திருக்கும் உரிமையாளர்கள் மற்றும் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள், இதுதொடர்பாக காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து, பேருந்து நிலையத்திற்கு வரும் திருநங்கைகளை அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில், “இது சம்பந்தமாக சில நாட்களில் மூன்றாம் பாலினத்தோர் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரிகள், அரசு அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தப்படுகிறது. அவரவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப தனியார் மற்றும் அரசு துறைகளில் வேலை வாய்ப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள கருத்து கேட்கப்பட உள்ளது. இதற்குப் பின் இதில் ஒரு சுமூக தீர்வு எடுக்கப்படும்” என்று சிதம்பரம் துணை காவல் கண்காணிப்பாளர் ரகுபதி நமது ஈடிவி பாரத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: முன் விரோதம்: வழக்கறிஞர்கள் மோதல்