கடலூர்: கோடை காலம் துவங்குவதை முன்னிட்டு உணவகங்களில் காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை செய்வதை தடுத்திட உணவு பாதுகாப்புத்துறையினர் தமிழ்நாடு முழுவதும் 3 நாட்களுக்கு தீவிர சோதனை நடத்தினர். அதன்படி, கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கைலாஷ்குமார் தலைமையில் தனிப்படையினர் அமைக்கப்பட்டு மாவட்டத்தில் நகரப்பகுதிகளில் சோதனை நடத்தினர்.
இதில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பா.சந்திரசேகர், க.சுப்பிரமணியன் ஆகியோரைக் கொண்ட குழுவினர் கடலூர் பேருந்து நிலையம், மஞ்சக்குப்பம் பகுதிகளில் உள்ள குளிர்பானங்கள் விற்பனை செய்யும் கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். இதில், காலாவதியான சுமார் 90 லிட்டர் குளிர்பானங்களை பறிமுதல் செய்து அழித்தனர்.
”குளிர்பானங்களை விற்பனை செய்வோர் நுகர்வோரின் நலன் கருதி அதன் பயன்பாட்டிற்கு காலம் முடிந்த பின்பு விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்” என்று எச்சரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க:வலிமைப் படம் ஓடும் தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீச்சு..!