கடலூர்: தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் இன்று (டிச.10) கடலூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய வேல்முருகன், “கடலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்எல்சி நிலக்கரி நிறுவனம், மின்சார உற்பத்திக்காக என் எல்சியைச் சுற்றியுள்ள சுமார் 53 கிராமங்களின் நிலங்களை கையகப்படுத்தி, நிலக்கரி வெட்டி எடுத்து மின்சார உற்பத்தியை செய்து வருகிறது.
இந்த நிறுவனம் 1950களில் இருந்து இன்று வரையில், நிலத்தை கையகப்படுத்திய கிராமங்களில் உள்ளவர்களுக்கு நிரந்தரமான வேலையை வழங்கியதில்லை. உரிய இழப்பீடும் வழங்கவில்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பங்களின் குறைகளையும் நிறைவேற்றவில்லை.
ஆனால் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையின் துணையோடு என்எல்சி, தனது உற்பத்தியில் தொடர்ந்து தொய்வின்றி நடத்தி வருகிறது. எனவே விவசாய பிரதிநிதிகள், தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கட்சி தலைவர்களைச் சந்தித்து, தங்களது கோரிக்கையை நிறைவேற்ற உறுதுணையாக இருக்குமாறு கேட்டுள்ளார்கள்.
அந்த வகையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவராக உள்ள என்னிடமும் கோரிக்கையை வைத்தார்கள். இந்த நிலையில் வருகிற டிசம்பர் 26ஆம் தேதி என்எல்சிக்கு வீடு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவும், என்எல்சி நிர்வாகத்தை கண்டித்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக உள்ளிட்ட சில கட்சியினர் சேர்ந்து மாபெரும் போராட்டத்தை நடத்த உள்ளோம்” என்றார்.
இதையும் படிங்க: மாநகராட்சி உதவி ஆணையரை தள்ளிவிட்ட வியாபாரிகள் - காரணம் என்ன?