நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் முதல் மே மாதம் வரை மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. தமிழ்நாட்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பணியில் அரசுப் பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதில் கடலூரில் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும் கிராம உதவியாளர்களும் தேர்தலில் பணியாற்றினர். அவர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் 50 விழுக்காடு வழங்க வேண்டும் என அரசாணை உள்ளது.
"ஆனால் இந்த அரசாணையின்படி சம்பளம் வழங்காமல் மூன்றில் ஒரு பகுதி மட்டுமே கையால் வழங்குகின்றனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோரிடம் கூறியுள்ளோம். அதற்கு அவர்கள் செவிசாய்க்கவில்லை" எனக் குற்றஞ்சாட்டிய கிராம நிர்வாக அலுவலர்கள் கடந்த மாதம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போராட்டத்தின்போது, இது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர், வருவாய் நிர்வாக ஆணையர், உள்துறை செயலரிடம் புகார் தெரிவித்து அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து அறிவிப்போம் எனத் தெரிவித்திருந்தனர்.
இதனிடையே, இன்று கடலூர் மாவட்டத்தில் உள்ள 10 தாலுகா அலுவலகங்களில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தால் தாலுகா அலுவலகத்தில் சான்றிதழ் பெறச் சென்ற பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.