கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே இன்று டெல்டா பிரிவு துணை காவல் ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான காவலர்களும், வேப்பூர் சரக காவலர்கள் இணைந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்களை, காவலர்கள் சைகை காட்டி நிறுத்தும்படி கூறியுள்ளனர்.
ஆனால் அவர்கள் நிறுத்தாமல் வேகமாக சென்றதைத் தொடர்ந்து, காவலர்கள் அந்த இளைஞர்களை விரட்டி பிடித்துள்ளனர். அப்போது அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் காவலர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
ஆனால் அவர்களின் தாக்குதலிலிருந்து தப்பித்த காவலர்கள், அவர்கள் இருவரையும் கைது செய்து வெப்பூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் இருவரும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த நிஷாந்த்(25), சுதாகர்(28) என்பதும், அவர்கள் மீது ஏற்கனவே கொலை, வழிப்பறி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையிலுள்ளதும் தெரியவந்துள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் ஆள் கடத்தல், வழிப்பறி கொள்ளைகளில் ஈடுபட்டு வந்த ராஜசேகர், மன்சூர் ஆகியோரின் கூலிப்படைகளிலும் இவர்கள் கூட்டாளிகளாக செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இருவர் மீதும் வழக்குபதிவு செய்த காவல் துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:இருசக்கர வாகனத்தை எரித்து நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் கைது