கடலூர் மாவட்டம் புவனகிரியை சேர்ந்தவர் ஜாகிர் உசேன்(59). இவர் கரோனாவால் பாதிக்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் நேற்று (ஏப்.13) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேபோல் பண்ருட்டி அருகே புதுப்பேட்டை சேர்ந்தவர் ஆறுமுகம்(51). இவரும் கரோனா தொற்று ஏற்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து இன்று (ஏப்.14) காலை, இவர்களின் உறவினர்கள் சடலத்தை பெற்றுக்கொள்ள சென்ற போது, ஆறுமுகத்தின் உறவினர்கள் ஜாகிர் உசேன் உடலையும், ஜாகிர் உசேன் உறவினர்கள் ஆறுமுகத்தை உடலையும் பெற்றுக்கொண்டு சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர்.
பண்ருட்டியில், ஆறுமுகத்தின் உறவினர்கள் உடலை அடக்கம் செய்யும் பொழுது முகத்தைப் பார்த்தபோது அதிர்ச்சியுற்று, அதில் வேறு ஒருவரின் உடல் இருப்பதை கண்டு பதற்றமான உறவினர்கள் மீண்டும் கடலூர் மருத்துவமனைக்கு ஆறுமுகத்தின் உடலை பெறுவதற்கு சென்றுள்ளனர்.
ஆனால் ஆறுமுகத்தின் உடலை மருத்துவமனையில் பெற்றுக்கொண்ட உசேனின் உறவினர்கள், அந்த உடலை புவனகிரியில் முறைப்படி அடக்கம் செய்துவிட்டனர். இதை அறிந்த ஆறுமுகத்தின் உறவினர்கள் செய்வதறியமால் திகைத்துள்ளனர்.
அதன்பின், புவனகிரிக்கு சென்ற ஆறுமுகத்தின் உறவினர்கள் ஜாகிர் உசேனின் உடலை அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர். தற்போது அரசு அலுவலர்கள் ஆறுமுகத்தின் உடலை தோண்டி எடுத்து மீண்டும் ஆறுமுகத்தின் உறவினரிகளிடம் ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: தபால்காரருக்குக் கரோனா - அஞ்சல் அலுவலகம் மூடல்