காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகேவுள்ள மேட்டுக் காந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சரத்குமார். இவர், தனது நண்பர்களான ரவிச்சந்திரன், ரகுபதி, சதீஷ்குமார் ஆகியோருடன் சேர்ந்து திருக்கடையூரில் ஒரு துக்க நிகழ்ச்சிக்காக காரில் சென்றுள்ளனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகேவுள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து கார் சாலையின் ஓரத்திலிருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில் ரகுபதி, சதீஷ்குமார் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சரத்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே சரத்குமார் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து ரவிச்சந்திரன் என்பவருக்கு மட்டும் கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதற்கிடையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், உயிரிழந்த ரகுபதி, சதீஷ்குமார் ஆகியோரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர்,விபத்து குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.