கடலூர்: சென்னை சூளைமேடு பகுதியில் பள்ளிக்குச் சென்று தாயுடன் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்த 9 வயது சிறுமியை மாடு ஒன்று முட்டி தூக்கி வீசி தாக்கியது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் அடங்குவதற்குள் கடலூரில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
கடலூர் தேவனாம்பட்டினத்தைச் சேர்ந்தவர் லோகேஷ்வரன் (15). இந்த சிறுவன் கடலூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி முடிந்ததும், லோகேஷ்வரன் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சுக்கு சென்றுள்ளார். அப்போது அவர், சில்வர் பீச்சில் சவாரி செல்லும் குதிரையின் அருகில் சென்றபோது, திடீரென அந்த குதிரை லோகேஷ்வரனை கடித்துள்ளது.
இதில் பதறிய சிறுவன் அங்கிருந்து ஓடத் தொடங்கியுள்ளார். இருப்பினும் அந்த குதிரை விடாமல் துரத்திச் சென்று சிறுவனை கடித்ததுடன், காலால் உதைத்துள்ளது. மேலும் சில்வர் பீச்சில் பஜ்ஜி கடை வைத்திருந்த தேவனாம்பட்டினத்தைச் சேர்ந்த பத்மாவதி (60) என்பவரையும், தேன்மொழி என்பவரையும் அந்த குதிரை கடித்து விட்டு, தேவனாம்பட்டினம் ஊருக்குள் ஓடியுள்ளது. தற்போது குதிரை கடித்ததில் லோகேஷ்வரன், பத்மாவதி மற்றும் தேன்மொழி ஆகிய 3 பேர் படுகாயமடைந்தனர்.
அதன் பிறகு அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே தேவனாம்பட்டினம் காவல் துறையினர், குதிரையின் உரிமையாளர் உதவியுடன் அந்த குதிரையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது குதிரை வேகமாக ஓடியுள்ளது. பின்னர் பொதுமக்களும் அதைத் துரத்திக் கொண்டே சென்றுள்ளனர்.
வேகமாக ஓடிய குதிரை அங்கு இருந்து ஒரு பள்ளத்தில் தடுமாறி விழுந்துள்ளது. பின்னர் அந்த குதிரையை மீட்டு கயிற்றால் கட்டிப் போட்டனர். ஆனால், ரத்த வெள்ளத்தில் மிதந்த அந்த குதிரை சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக குதிரையின் உரிமையாளர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது இந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குதிரை வளர்க்க மாநகராட்சியிடம் அனுமதி பெறப்பட்டு உள்ளதா? மேலும், கடலூர் சில்வர் கடற்கரையில் ஒட்டகம் மற்றும் குதிரைகள் சவாரி செய்வது வழக்கம். தற்பொழுது ஒட்டகங்கள் சில மாதங்களாக இல்லாத நிலையில், குதிரை சவாரி மட்டுமே நடைபெற்று வருகிறது.
இப்படி குதிரை சவாரி செய்வதற்கு மாநகராட்சியிடம் உரிய அனுமதி பெற்று இருக்க வேண்டும். ஆனால் உரிய அனுமதி பெறாமல் அனுமதியின்றி குதிரையை வாங்கி வந்து வீட்டில் கட்டி வைத்திருந்ததும் தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: பட்டாக் கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டம்.. வீடியோ வைரல்!